Sunday, July 11, 2010

மதராசபட்டினம் -- நம்ம ஊரு டைட்டானிக்


கண்டிப்பாக இது விமர்சனம் அல்ல. ஒரு சினிமா படைப்பை விமர்சனம் செய்யும் அளவுக்கு இன்னும் வளரவும் இல்லை. ஆனால் ஒரு ரசிகனாக நான் ரசித்தவற்றைப் பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம். இது சினிமாவைப் பற்றிய என்னுடைய நேரடியான முதல் பதிவு. ஒரு தரமான படத்தைப் பற்றி அமைவது தற்செயல் என்றாலும் அது எனக்கு மகிழ்ச்சியே. ஓகே ஓவர் டூ மதராசபட்டினம்.

நான் சென்னையை முதன் முதலில் பார்த்ததே அது சென்னை எனும் பெயர் மாற்றம் பெற்று ஒன்பது வருடங்கள் கழித்து நான் வேலைக்கு சேர்ந்த போதுதான். அதனால் மதராசபட்டினம் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நான் யோசித்தது கூட இல்லை. இந்த படத்தைப் பார்த்த பிறகு ஓரளவு யூகிக்க முடிவது இந்த படத்தின் வெற்றி. இது ஒரு பீரியட் ஃபிலிம்தான் ஆனால் டாகுமெண்டரி அல்ல. ஏதோ சுதந்திர போராட்டத்தையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் படமாக இருக்கும் என்று ஒரு எண்ணம் இருந்தால், கவுண்ட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே அதையும் கிழித்து போட்டுவிட்டு தியேட்டருக்குள் செல்லவும் (என்னைப் போல் தியேட்டரில் பார்ப்பவர்களாக இருந்தால்). படத்தின் மையக்கரு... அதான்.. அதேதான்.. காதல்... அவன், அவள், காதல் அதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு, அவர்கள் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா?

காதலை
வைத்துக் கொண்டு வேற என்ன சொல்ல முடியும் என்று நீங்கள் நினைப்பதில் தவறே இல்லை, இங்கும் அதேதான். கவனிக்க, இங்கு நான் அவர்கள் காதல் ஜெயித்ததா? தோற்றதா என்று சொல்லவில்லை ஏனென்றால் காதல் தோற்பதில்லை.. காதலர்கள் சேர்வதும் பிரிவதும் ஆகிய இந்த இரு நிகழ்வுகள், புறத்தே காதலின் முடிவாக எப்போதுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அகத்தே?? அதுதான் இந்த படத்தின் கதையும்!

ஆரம்ப காட்சியில் ஒரு ஆங்கில பாட்டி தாத்தாவோட இறுதி சடங்கின் போது மயங்கி விழுகிறார். டாக்டர் தலையில் எப்போதோ அடிபட்டதால் மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக சொல்லி ஆப்பரேஷனுக்கு நாள் குறிக்கிறார். இங்கே பாட்டி ஒரு டார்ட்டாய்ஸ் கொசு வத்தி சுருள் கொளுத்துகிறார் (அதான் ஃ பிளாஷ்பாக்). உடனே தான் இந்தியா செல்ல வேண்டும் என்றும், முடிக்க வேண்டிய காரியம் ஒன்று அங்கே இருப்பதாகவும் கூறி அடம் பிடிக்கிறார். இங்கிருந்து படம் 2010க்கும் 1947க்கும் மாறி மாறி பயணிக்கிறது. பொதுவாக சில படங்களில் டார்ட்டாய்ஸ் கொளுத்தும் போது தியேட்டரில் அமர முடியாத அளவுக்கு புகையைக் கிளப்பி மூச்சு திணற வைத்து விடுவது உண்டு. ஆனால் இந்த படத்தில் கொசு வத்தி கொளுத்தும் போதெல்லாம் காதல் நறுமணமும் சலவைத் தொழிலாளர்களின் வியர்வை வாசமும் கலந்து கட்டி (சில இடங்களில் தவிர்க்க முடியாத ரத்த வாடையும்தான்)அடித்து நம்மை திக்கு முக்காட வைத்திருக்கிறது.

எமி ஜாக்சன்!!!!! படத்தில் இவர் எமி வில்கின்சன். சென்னை, மன்னிக்கவும் மதராசபட்டினத்தின் கவர்னர் வில்கின்சனின் மகள். மேலே சொன்ன அந்த பாட்டி இவங்கதான்.(பாட்டி யூத்ல செம பியூட்டி!! மிஸ் டீன் வோர்ல்டாம் படம் பார்த்து விட்டு வந்து கூகுளாண்டவர் கொடுத்த தகவல்). அவர் ஊர் சுற்றி பார்க்க இந்தியா வருகிறார், அதன் பின்பு இந்த படம் முழுதும் அவரை சுற்றியே வருகிறது (நம் மனதும்தான் :-)). இங்கே வந்து எதைப் பார்த்தாலும் வியப்பதும், கேள்வி கேட்பதுமாக அவரின் வெகுளித்தனத்தால் மனதில் பச்சக் என்று பத்து நிமிடத்தில் இல்லை இல்லை பத்து வினாடிகளில் ஒட்டிக் கொள்கிறார். அதன் பிறகு படம் முடிந்து வெளி வரும் போதும், பார்த்து பல மணி நேரம் ஆன பிறகும், இதோ இப்போது இதை எழுதும்போதும் மனம் முழுக்க வியாபித்திருக்கிறார். இதுவே அந்த கதாபாத்திரத்தின் வெற்றி!! கதாநாயகியாக இவரைக் கண்டுபிடித்த உடனே படத்தில் பாதி வேலை முடிந்திருக்க வேண்டும் டைரக்டர் விஜய்க்கு. அவருடைய தமிழ் உச்சரிப்பின் உதட்டசைவுக்கு கொடுத்திருக்கும் உழைப்புக்கு ஒரு சல்யூட்! ஸ்ரேயா உள்ளிட்ட மற்றவர்கள் இதைப் பார்த்தால் தேவலாம். ஒரு இங்கிலாந்து பொண்ணுக்கு இருக்கிற சிரத்தை க்ளோசப் காட்சிகளில் அவரின் முக பாவங்கள்... உண்மையிலேயே சூப்பர்! நம்ம டைரக்டர்களும் இதை கவனித்தால் தேவலை.




அடுத்து பரிதியாக ஆர்யா.. தேவைப்படும் இடங்களில் தேவையான அளவு நடித்து/உழைத்து தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சில இடங்களில் லகான் அமீர் மனதில் வந்து போகிறார். இவரிடம் உள்ள வீரமோ இல்லை எதுவோ ஒன்று (காதலுக்கு காரணம் தேவையா என்ன?) எமியை இவர் மீது காதல் கொள்ள வைக்கிறது. எமியை ஸ்க்ரீனில் பார்க்கும் நமக்கே பிடிக்கும் போது நேரில் பார்க்கும் ஆர்யாவுக்கு பிடிக்காமல் போகுமா? அப்புறம் என்ன? தான தோம் தனன தான தோம் தனன தான்.

ஒரு சில காதல் காட்சிகள் கிளிஷேவாக இருந்தாலும் இருவரும் மற்றவர் மொழியைக் கற்க எடுக்கும் முயற்சிகளும், வெளுக்க போடும் துணிகளை தூதாக பயன்படுத்திக் கொள்வதும், தப்பு தப்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி உரையாடுவதும் கல கல... "மர்ந்திட்டியா" " உன் மௌன்துக்கு என்ன அர்டம்" என்று அவர் தமிழில் கேக்கும் போது அடடா அடடா!! இதற்கிடையில் ஒரு பிரிட்டிஷ் போலீஸ்காரரை எமிக்கு அவர் சம்மதமில்லாமல் திருமணம் செய்ய நிச்சயிக்கிறார் கவர்னர். இந்தியா சுதந்திரம் பெறும் நேரமும் வருகிறது. ஊரே கோலாகலமாக இருக்க, எமி பரிதியோடு பழகுவது கவர்னருக்கு தெரிய வர, ஆர்யாவைத் தேடி வரும் எமி போகமாட்டேன் என்று கூறும்போது அதற்கு தன் அம்மாவின் தாலியைக் கொடுத்து வாழ்வோ சாவோ உனக்கு இங்குதான் என்று சொல்லி அனுப்புகிறார் (நம்பிக்கை சென்ட்டிமென்ட்டாம்). அதன் பிறகு எமியை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? என்பது ஃ ப்ளாஷ்பாக்கின் கிளைமாக்ஸ். இந்த தாலியை திருப்பிக் கொடுக்கத்தான் எமி பாட்டி இந்தியா வர அடம் பிடித்தது. இப்போது தெரிந்திருக்குமே இருவரும் சேர்ந்தார்களா என்பது.

குஸ்தி வாத்தியாராக நேதாஜியைப் பின்பற்றுபவராக நாசர், சாதாரண சலவைத் தொழிலாளியாக எம் எஸ் பாஸ்கர் மற்றும் பாலாசிங். இவர்களின் கதாபாத்திரத்தின் படைப்பில் உள்ள வேற்றுமைகளும் அவை பேசும் வசனங்களும் சுதந்திரத்தைப் பற்றியும் ஆங்கிலேயர்களிடம் நமக்கு இருந்த பயம் பற்றியும் நம்முடய அறியாமையையும் படம் பிடிக்கிறது. ஆர்யாவின் தங்கை மற்றும் நண்பர்கள் என அனைவரும் பாந்தம். முக்கியமாக ஹனீபா.. வீ ஆர் கோயிங் டூ மிஸ் ஹிம்!

படத்தில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் கலை இயக்குனர் செல்வகுமாரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும்!! சென்ட்ரல், ரயில், கூவம், ட்ராம், பிரிட்டிஷ் கவர்னர் வீடு என முடிந்த அளவுககு சென்னை டூ மதராசபட்டினம் பயணத்திற்கு தனது உழைப்பை எரிபொருளாகக் கொடுத்து பெரும் உதவி புரிந்திருக்கிறார் செல்வகுமார். இனி ஒவ்வொரு முறை கூவம் மற்றும் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் செல்லும் போதும் இந்த பட காட்சிகள் கண் முன் வந்து செல்லும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அடுத்ததாக ஜிவி பிரகாஷ், தனது பாடல்களின் மூலமாகவும் பின்னணி இசை மூலமும் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு அதற்கு சிறிதும் குறைவில்லாத அளவுக்கு இசை அமைந்துள்ளது. எமிக்கும் ஆர்யாவுக்கும் காதல் பூக்கும் தருணத்தில் வரும் "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலில் முத்துக்குமாரின் தமிழ் தனித்து தெரிகிறது! ஃ ப்ளாஷ்பாக்கில் வரும் ஆருயிரே பாடல் மட்டும் இன்னும் கொஞ்சம் மங்கலாகக் காட்டி இருக்கலாம், கொஞ்சம் நவீனமாக இருப்பதாக எனக்கு பட்டது. மற்றபடி ஒளிப்பதிவு கதையோடு இணைந்தே இயங்கி இருப்பதாக தோன்றுகிறது. நம்மிடையே தற்போது டெக்னீஷியன்சுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் இசை நமக்கு பல திறமையாளர்களால் பல வடிவங்களில் கிடைக்கிறது. ஜி வி யும் சரியான கூட்டணி அமைத்தால் கலக்குவார் என்பதற்கு வெயில், ஆயிரத்தில் ஒருவன், அங்காடித் தெரு, ஆனந்த தாண்டவம், மற்றும் இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். நம்முடைய சில பாடல்கள் மேற்கத்திய இசையின் மறுபதிப்பாக இருந்தாலும் கூட நம் ஆட்களிடம் சரக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

"ஆற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே"

"வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா- வழிப்போக்கன்
வந்துதான் தங்கி செல்லுவான் சும்மா"
எனும் வரிகளிலும், எம் எஸ் வி மற்றும் விக்ரம் இணைந்து பாடி இருக்கும் மேகமே பாடலிலும் முத்துக்குமாரின் தமிழ் தனி ஆவர்த்தனம் செய்கிறது..

திருப்பம் எதுவும் இல்லா விட்டாலும் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ் கொஞ்சம் கனத்த மனதோடு வெளி வர வைக்கிறது என்பது என்னவோ உண்மை!! இது போன்ற கிளைமாக்ஸ்கள்/படைப்புகள் தமிழ் சினிமாவில் தோற்றது இல்லை தோற்கவும் கூடாது. தோற்காமல் இருக்க வைக்க வேண்டியது ரசிகர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது, இல்லாவிட்டால் சுறாக்களும் சிங்கங்களும் நம்மை அடிக்கடி தாக்க நாமே வாய்ப்பளித்த மாதிரி ஆகி விடும்.

கடைசியாக கதையின் நாயகன் டைரக்டர் விஜய்!! சென்னை டூ மதராசபட்டினம் எனும் கடினமான பாதை உள்ள சவாலான பயணத்தை துணிச்சலாக தொடங்கியதற்காகவும் அதை ஒரு வழிகாட்டியாகவும் ஓட்டுனராகவும் இருந்து சிறப்பாக முடித்தமைக்காக வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!! ஆங்காங்கே சில வேகத்தடைகள் மற்றும் சிறிய அசௌகர்யங்கள் இருந்தாலும், விபத்துக்களோ சேதாரங்களோ இல்லாமல் அந்த இனிமையான பயணத்தை நம்மையும் ஒரு பயணியாக அனுபவிக்க வைத்ததற்காக கூடவே நன்றிகளும்.. இவரின் முந்தைய இரண்டு படங்களான "கிரீடமும்" "பொய் சொல்ல போறோமும்" குறைவில்லாத படங்களாக இருந்தாலும் அவை ரீமேக் என்பதால் பெரிதாக கவனிக்கப்படாத இயக்குனராக இருந்தார். ஆனால் இந்த படத்தின் மூலம் அவரின் அடுத்த படைப்புக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கதை மற்றும் பாத்திரத் தேர்விலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு வரை அவரின் உழைப்பும் முனைப்பும் தெரிகிறது. முதல் பதிவில் விஜய் என்னும் என் பெயரைப்பற்றிய என்னுடைய கருத்தை இவரை மனதில் இருத்தி வாபஸ் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

குறைகள்
?? இருக்கு.. அவை நமக்கு எதற்கு?? ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது??

மொத்தத்தில் மதராசபட்டினம் (என் பார்வையில்) -- சுகமான பயணம்.. (போலாம் ரைட்...)

6 comments:

  1. //
    கண்டிப்பாக இது விமர்சனம் அல்ல. ஒரு சினிமா படைப்பை விமர்சனம் செய்யும் அளவுக்கு இன்னும் வளரவும் இல்லை.
    //
    இந்த பதிவு நீங்கள் வளர்ந்து விட்டதை சொல்லுகிறது.

    //
    இது சினிமாவைப் பற்றிய என்னுடைய நேரடியான முதல் பதிவு.
    //
    முதல் முயற்சி மிக நன்றாக.... வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  2. Dai... great review .. Ithai appadiye Aanandha vikatan, Kumudham ellathukum anupu ... Part time job ah, indha velai (movie review)pannalam nee.. Aana enna, appa appa Vijay padam ellam nalla irukunu solla vendi irukum (rasigargalukkaaga). Naan innum padam paakala.. Must watch movie pola .. This week paathudalaam :P

    ReplyDelete
  3. @வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...
    மிக்க நன்றி!! உங்கள் ஊக்கத்துக்கு..அடுத்தடுத்த பதிவுகளை இடும் போது இன்னும் கவனத்துடன் இருக்க இவை கண்டிப்பாக உதவும்..

    ReplyDelete
  4. @Senthilartful

    Thanks da! pudhiya muyarchigalai paarattanum.. andha vagaiyil madarasapattinam kandippa oru sirandha muyarchi.. nothing in this world is perfect... because views/taste differs.. adhanaaladhaan ulagam inrum oruvidha samarasathodu pirachinai illaamal iyangudhu..

    ReplyDelete
  5. இந்த பையா பையனுக்குள் ஏதோ இருக்கு பாரேன்...!! Day to day your improving a lot best of luck to you..!! am expecting more from you :)

    ReplyDelete
  6. Ambani mathiri ellam field kum porathu mattumillamal neenga dan best nu proof panreengaley..Superb unga review..sakala kala vallavan ku valthukkal....

    ReplyDelete